பீகார் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை; 35 லோக்சபா இடங்களுக்கு இலக்கு.! ஆள் தூக்கும் வேலையை கைவிட்டது பாஜக

புதுடெல்லி: பீகார் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்திய நிலையில், அம்மாநிலத்தில் 35 லோக்சபா இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இடைபட்ட காலத்தில் ஆளுங்கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை தூக்கும் வேலையில் பாஜக ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. நேற்று அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று டெல்லி பாஜக தலைமையகத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் முன்னிலையில் பீகார் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் கட்சியின் மாநில தலைவர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பீகாரில் அமைந்துள்ள புதிய கூட்டணியானது, மக்களை ஏமாற்றும் கூட்டணி. வரும் 2024 லோக்சபா தேர்தலில் 35 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார். பீகாரில் 40 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், தற்போது 17 இடங்கள் பாஜகவிடம் உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களையும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 இடங்களும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பீகாரில் புதிய அரசு அமைந்துள்ளதால், அந்த அரசுக்கு எதிராக அரசியல் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் 2024 லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதன் பின் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் என்பதால், அந்த தேர்தலையும் எதிர்கொள்ள வசதியாக ஆளுங்கட்சி கூட்டணிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கு இடையே, நிதிஷ் குமாரின் கட்சியை உடைக்கும் வேலையிலோ, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களை தூக்கும் வேலையிலோ பாஜக ஈடுபட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.