சென்னை: ‘பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்பதாக பேசியிருந்தார்.
இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டிவிடுதல், 505(1)(b)- அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி கிரிஜா ராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, புகார்தாரர் த.பெ.தி.க. குமரன் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இரு மனுக்களையும் நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.