வாஷிங்டன்,
உலக பெரும் பணக்காரராரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக இன்று டுவீட் செய்து இருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் , நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இந்த பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலே மற்றொரு பதிவில் நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன் என எலான் மஸ்க் டுவீட் செய்து இருந்தார்.
மான்செஸ்டர் யுனைடெட் உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றாகும். இந்த அணியை மஸ்க் வாங்கப்போவதாக அறிவித்தது இன்று இணையத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில் கால்பந்து அணியை வாங்கும் நோக்கத்தில் நீங்கள் தீவிரமாக உள்ளீர்களா என்று ஒரு சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மஸ்க், “டுவிட்டரில் இந்த நகைச்சுவை நீண்ட நேரமாக தொடர்கிறது. நான் எந்த விளையாட்டு அணிகளையும் வாங்கவில்லை. ஒருவேளை நான் எந்த அணியையும் வாங்குவதாக இருந்தால், அது சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த அணியாக இருந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியாக இருந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.