75-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. இதையடுத்து நாட்டு மக்களிடம் பேசிய அவர், “ஊழலும், வாரிசு அரசியலும்தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சாவல்கள்” என்றார். பிரதமர் மோடியின் பேச்சை பா.ஜ.க ஆதரவாளர்கள் கொண்டாடிவரும் சூழலில், எதிர்க்கட்சியினர் அதனை விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து வாரிசு அரசியல், ஊழல் ஆகியவற்றைப் பிரதமர் மோடி விமர்சிப்பதன் பின்னணி என்ன?
மோடியின் பேச்சு!
“ஊழல் என்பது நாட்டின் வளர்ச்சியை அரித்துக் கொண்டிருக்கும் கரையான். ஊழலைத் தடம் தெரியாமல் நாம் துடைத்தெறிய வேண்டும். ஊழல்வாதிகளை சமூகம் ஒன்றிணைந்து தண்டிக்க வேண்டும். அதேபோல நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் வாரிசு அரசியல். குடும்ப நலன்களில் மட்டும் அக்கறை கொள்பவர்கள் நாட்டு நலன்களைப் பற்றிக் கவலை கொள்ளமாட்டார்கள். பல துறைகளில் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவதால், உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்புகள் பறிபோகின்றன. அரசியல், விளையாட்டு என அனைத்திலும் வாரிசு கலாசாரத்தை நீக்க வேண்டும்” என்று பேசியிருந்தார் பிரதமர் மோடி.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் மிக அருமையாகப் பேசினார். அவரின் பேச்சு இந்தியாவை வளமான நாடாக மாற்ற ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவித்திருக்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டார். அமித் ஷா தவிர மற்ற மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க நிர்வாகிகளும் பிரதமர் மோடியின் பேச்சை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, ஊழல், வாரிசு அரசியலை ஆகியவற்றை ஏன் தொடர்ந்து விமர்சித்து வருவதன் பின்னணியில் இருக்கும் சில காரணங்களைச் சொல்கின்றனர் தேசிய அரசியல் பார்வையாளர்கள். “பா.ஜ.க ஆட்சியில் இல்லாத பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. அங்கு அவர்களது பலத்தைக் குறைக்க பா.ஜ.க கையிலெடுத்திருக்கும் ஆயுதங்கள்தாம் வாரிசு அரசியலும், ஊழலும். பெரும்பாலான மாநிலக் கட்சியின் முக்கியத் தலைவர்கள்மீது ஏதோவொரு ஊழல் குற்றச்சாட்டு இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில்கூட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஒரு ஊழல் மோசடியில் கைது செய்யப்பட்டார். ஊழலைத் தாண்டி மாநிலக் கட்சிகளிலும், காங்கிரஸிலும் ஏராளமானவர்கள் வாரிசு அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர். அதிலும் மாநிலக் கட்சிகளிலுள்ள வாரிசு தலைவர்கள் சிலர் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருக்கின்றனர். இது பா.ஜ.க-வுக்கு தலைவலியாக இருக்கிறது.
பீகாரில் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் என முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு டஃப் கொடுப்பது வாரிசு அரசியல்வாதிகள்தான். ஊழல், வாரிசு அரசியல் ஆகிய இரண்டு விஷயங்களை கையிலெடுத்துத்தான் காங்கிரஸைப் பல மாநிலங்களில் ஓரங்கட்டியது பா.ஜ.க. தற்போது அதையே மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்யவும் பயன்படுத்துகிறது. இதனால், இந்த இரண்டையும் பிரதமர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மேலும், “பா.ஜ.க-விலும் வாரிசு அரசியல் இல்லாமல் இல்லை. மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயலின் தாய், தந்தை இருவரும் அரசியல்வாதிகள்தாம். மத்திய அமைச்சர்களான அனுராக் தாக்கூர், ஜோதிராதித்ய சிந்தியா, தர்மேந்திர பிரதான் ஆகியோரும் வாரிசு அரசியல்வாதிகள்தான். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மையும் முன்னாள் கர்நாடக முதல்வர்தான். கிரிக்கெட் துறையில் நிபுணத்துவம் இல்லாத ஜெய் ஷா பி.சி.சி.ஐ-ன் செயலாளர் ஆனதற்குப் பின்னணியிலும் வாரிசு அரசியல் ஒளிந்திருக்கிறது” என்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தரும் வகையில் பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலர், “ஒரு கட்சியே ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் வாரிசு அரசியல். காங்கிரஸ் கட்சி காலம் காலமாகக் காந்தி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தி.மு.க, கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. ஆனால், பா.ஜ.க-வில் யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம். அப்படி எத்தனையோ தலைவர்களை பா.ஜ.க உருவாக்கியிருக்கிறது” என்கின்றனர்.