புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு நற்செய்தியாக இருப்பது அக்னிபாதை திட்டம். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஹரியாணா மாநிலம் ஹிசாரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்காக மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் அக்னி பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான மத்திய அமைச்சரவை அனுமதி கடந்த ஜுன் 14-ல் அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையில் சேர்வதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜுலை 24-ல் இந்திய விமானப்படைக்காக, அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தற்போது தரைப்படைக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது.
ஹரியானாவில் ஹிசார் உள்ளிட்ட நான்கு இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய ஆள்சேர்ப்பு முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இம்மாநில இளைஞர்கள் ராணுவத்தில் சேரும் ஆர்வத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதற்கான உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு வரப்பிரசாதமாக அக்னிபாதை திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் 4 வருட பணிக்குப் பின் அவர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தின் நிரந்தரப் பணியில் தொடரலாம்.
அகில இந்திய அளவிலான இந்த அக்னிபாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர் ‘அக்னி வீரர்’ என அழைக்கப்படுகிறார். நான்கு வருட பணிக்கு பின் தொழில்நுட்பத் திறனுடன் சமூக ஒழுக்கம்கொண்டவராக மேம்படும் இவருக்கு இதர பணியில் சேரும்வாய்ப்பு கிடைக்கும். ஒரு இளைஞரை மேலும் பண்பட்டவராக அக்னிபாதை உருவாக்குகிறது. எந்நேரமும் தயங்காமல் எந்தவிதபிரச்சினையையும் எதிர்கொண்டு வெல்லவும் அக்னிபாதை வழிவகுக்கும். இங்கு அவர்களுக்கு கிடைக்கும் தொழில்நுட்ப அறிவானது, நாட்டின் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் கிடைக்கும் அளவுக்கு நிகரானது ஆகும்.
அக்னிபாதை பணிக்காலத்தில் கிடைக்கும் ஊதியம், சமூகத்தின் ஒரு சக இளைஞரின் பொருளாதார நிலையை விட உயர்ந்திருக்கும்.
வயது வரம்பு 17.5 முதல் 21 வரை
இத்திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பு 17.5 முதல் 21 வரை ஆகும். ஐடிஐ, டிப்ளமா உள்ளிட்ட தொழிற்கல்வி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் ‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் கீழ் கூடுதல் தகுதி உருவாக்கப்படும்.
இதுபோன்ற திட்டங்களை அமலாக்கும் சர்வதேச நாடுகளின்சிறந்த அம்சங்களைச் சேர்த்துஅக்னிபாதை உருவாக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தில் பெண்களும் எதிர்காலத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.