புதுடெல்லி: ‘அரசு அலுவலங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும் ஊழியர்கள் கவுரவிக்கப்படுவார்கள்,’ என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் லஞ்சத்தை தடுப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தில் நேர்மையை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆணையம் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளிலும் ஊழலை கட்டுப்படுத்த உதவும் ஊழியர்களை தேர்வு செய்து அனுப்பும்படி கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஊழலை கட்டுப்படுத்த உதவும் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் இருப்பார்கள். அவர்களது சரியான மற்றும் உரிய நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் லஞ்சம் கட்டுப்படுத்தப்படும். கடந்தாண்டு இது போன்று அடையாளம் காணப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதே போன்று, இந்தாண்டுக்கான ஊழியர்களை அரசு துறைகளில் அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை தலைமை செயல் அதிகாரியின் ஒப்புதலுடன் அனுப்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.