பெங்களூரு : ”விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையில் மட்டுமே, வேலை வாய்ப்பில், 2 சதவீதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இனி அனைத்து துறைகளுக்கும் இட ஒதுக்கீடு விரிவாக்கம் செய்யப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
பிரான்சின் பாரீஸ் நகரில் 2024ல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்தும் வகையில், 75 விளையாட்டு வீரர், வீராங்கனையரை கர்நாடக அரசு தத்தெடுத்தது.தற்போது முதல், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் வரை பயிற்சி, உணவு, இருப்பிடம், பயண செலவு அனைத்தும் கர்நாடக அரசே ஏற்றுகொள்ளும்.அவர்களுக்கும், சமீபத்தில் பர்மிங்காம் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற கர்நாடக விளையாட்டு வீரர்களுக்கும், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று பாராட்டு விழா நடந்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை ஊக்கத்தொகை வழங்கி பேசியதாவது:விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு தேவை என்பதை அரசு உணர்ந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் தனக்காகவும், நாட்டுக்காகவும் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. மீதியை அரசிடம் விடுங்கள். உங்கள் சாதனைகளுக்கு ஏற்ப நாங்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறோம்.
முதல் மாநிலம்
விளையாட்டு தத்தெடுப்பு திட்டத்தை செயல்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகா. பயிற்சிக்காக தனி மைதானங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.கூடைப்பந்தாட்டத்தை மாநில விளையாட்டாக ஏற்றுக்கொள்கிறோம். திறமைகளை கண்டறிய கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகள் இரண்டு மாதங்களில் துவங்கப்படும்.பா.ஜ., அரசு விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக விளையாட வாருங்கள்.
தத்தெடுப்பு திட்டம்
கர்நாடக விளையாட்டு வீரர்கள் மீது எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 75 பேர் கொண்ட விளையாட்டு தத்தெடுப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.அரசு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு முன் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இதற்கு முன் எந்த திட்டமும் இல்லை. நீங்கள் சாதிக்க உங்கள் திறமையை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். நாட்டுக்காக விளையாடி பதக்கம் வெல்லுங்கள்.விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையில் மட்டுமே, வேலை வாய்ப்பில் 2 சதவீதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இனி அனைத்து துறைகளுக்கும் இட ஒதுக்கீடு விரிவாக்கம் செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement