“இன்று இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள். அவரிடம் நீங்கள் பார்த்துப் பிரமித்த விஷயங்களைச் சொல்லுங்களேன்” என இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்டேன். ஷங்கரின் பல படங்களில் அவர் பணிபுரிந்திருக்கிறார் என்பதால், ஒரு குழந்தையைப் போன்ற குதூகல துள்ளலுடன் சொல்ல ஆரம்பித்தார் பாலாஜி சக்திவேல்.
“ஷங்கர் சார்கிட்ட நான் வியந்த விஷயங்கள், கத்துக்கிட்டதுன்னு நிறைய இருக்கு. அவர்கிட்ட ஒர்க் பண்ணின தருணங்கள் எல்லாமே ஒரு ஸ்வீட் மொமன்ட்ஸ்தான். படப்பிடிப்புகள்ல மட்டுமில்லாமல், கதை விவாதங்கள்லேயும் நான் பங்கேற்றதுண்டு. ஷங்கர் சாரோட சின்ஸியாரிட்டி, பிளானிங் ரெண்டுமே பர்ஃபெக்ட்டா இருக்கும். அவரோட வெற்றிக்கு அடித்தளமே, அவர் ஒரு வேலையில இறங்கினா நூறு சதவிகிதம் உழைப்பைக் கொடுக்கறதுதான். பிரமாண்டமான படங்களை அவர் பண்றதுக்குக் காரணமும் அந்த உழைப்பும், பக்கா திட்டமிடலும்தான். எப்படித் திட்டமிடணும்னு அவர்கிட்டத்தான் கத்துக்கிட்டேன். சில பேர் பிளான் பண்ணுவாங்க. ஆனா, அதைச் செயல்படுத்தறப்ப சொதப்பிடுவாங்க. ஷங்கர் சார் அப்படியில்ல. திட்டமிட்டதைச் செயல்படுத்துறது மட்டுமில்லாம அதை எப்படிப் பண்ணினா எளிதில் செயல்படுத்திட முடியும்னு அவருக்குத் தெரியும்.
பிளானிங்கை அவரது அலுவலகத்துல ஒரு பெரிய போர்டுல எழுதி வச்சிடுவார். நாளைக்கு ஒரு செட் போடணும்னு நினைச்சா அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும், உடனே அதை பண்ணமுடியுமா என்பது பற்றியெல்லாம் கரெக்ட்டா திட்டமிட்டுச் சொல்வார். அவர்கிட்ட ‘அது பாசிபில் இல்லையே’ன்னு காரணம் சொல்லித் தப்பிக்க முடியாது. ஏன்னா, சோழ நாட்டு முறை மாதிரி ஃபாலோ அப்பிலும் ஃபாலோ அப் இருக்கும். அதுக்குன்னே தனிப்படை, ராணுவம் மாதிரி கட்டுக்கோப்பா வச்சிருப்பார்.
ஒரு கேள்விக்குக் குறைஞ்ச பட்சம் இருபது உபகேள்விகள், துணை கேள்விகள்ன்னு ரெடியா அவர்கிட்ட இருக்கும். அந்தத் திட்டமிடல் ஒரு பெரிய கார்ப்பரேட் அக்ரிமென்ட் மாதிரி பக்காவா இருக்கும். இதெல்லாம் வியப்பா இருக்கும். ஏன்னா, இப்ப ஹாலிவுட்ல அப்படித்தான் திட்டமிடல் பண்றாங்க. ஆனா, அங்கே தனித்தனி துறைகள் இருக்கும். நம்மூர்ல அப்படியில்ல. திட்டமிடலைச் செயல்படுத்த உதவி இயக்குநர்களுக்குக் கத்துக் கொடுக்கற பயிற்சி இருக்கே… அது எந்தக் கல்லூரிக்குப் போனாலும் கிடைக்காத ஒன்று. அவர் ஓய்வு எடுக்கறதா இருந்தால் கூட, ஒர்க் முடிஞ்சதும் கரெக்ட்டான சமயத்துலதான் ரெஸ்ட் எடுப்பார். அந்த டைமும் பக்காவா பிளான் பண்ணித்தான் ஓய்விலும் இருப்பார்.
இது எல்லாத்தையும் விட ஆச்சர்யம், புகழ்ச்சியை ரொம்பவே தள்ளியே வைப்பார். யாராவது அவரை புகழ்ந்தால்கூட அதைக் கேட்கக் கூச்சப்படுவார். அப்படியும் நாம அவரை புகழ்ந்தால், அதைக் கடந்து போகவே விரும்புவார். புகழ் ஒரு போதையாகிடும் என்பதுல கவனமா இருப்பார். அதனாலதான் ஒரு படம் முடிச்சதும் உடனே அடுத்த படம் பத்தி நினைக்க ஆரம்பிச்சிடுவார். அவரோட ஒர்க்கிங் ஸ்டைல்ல இதுவும் கத்துக்க வேண்டிய ஒன்று. புகழைத் தலைக்கு ஏத்திக்காமல் உழைக்கணும்னு புரிய வைப்பார். இன்றைய இயக்குநர்கள் பலரும், வருங்கால இயக்குநர்கள் பலரும் இதை ஃபாலோ பண்ணணும்னு நானும் விரும்புவேன்.
அவர்கிட்ட நான் நெகிழ்ந்த விஷயங்களும் உண்டு. அவரோட அம்மா மீது அவ்ளோ பிரியமா இருப்பார். அந்தப் பாசத்தை நானும் நேர்ல பார்த்திருக்கேன். நேர்ல அவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிக்கறப்ப ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இருப்பாங்க. ‘ஜென்டில்மேன்’ல நான் உதவி இயக்குநரா இருக்கும் போது, வீட்டுல அவரும் அவங்க அம்மாவும் தான்இருப்பாங்க. நாங்க ஷூட்டிங்குக்கு கார்ல அவரை பிக் அப் பண்றதுக்காக அவர் வீட்டுக்குப் போனால், அவரும் அவங்க அம்மாவும் அப்படி அழகா, கலகலன்னு பேசிட்டு இருப்பாங்க. அந்த அன்பும், நெகிழ்வும் இப்பவும் கண்ணுக்குள்ல நிக்குது. அவருக்கு உங்கள் சார்பா நானும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்றது சந்தோஷமா இருக்கு. ஹேப்பி பர்த் டே ஷங்கர் சார்!”