குவஹாத்தி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மத ரீதியிலான ஒடுக்குமுறைக்குள்ளாக்கி தப்பி வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க புதிய சட்டம் வகை செய்கிறது. அத்துடன் மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
மேலும் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில்தான் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் முதலில் மையம் கொண்டது. பின்னர் வடகிழக்கு மாநிலங்கள் முழுமைக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்தே நாட்டின் பல மாநிலங்களிலும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. வடகிழக்கு மாநிலங்களில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக லட்சக்கணக்கானோர் குடிபெயர்ந்துள்ளனர். சி.ஏ.ஏ. மூலமாக இவர்கள் அனைவருமே இந்திய குடியுரிமையை பெற்றுவிடுவர். இதனால் வடகிழக்கு மாநிலங்களின் பூர்வகுடிகளாக ஆதி பழங்குடி இனத்தவர் மிகவும் சிறுபான்மையினராகிவிடுவர் என்பதாலேயே வடகிழக்கு மாநிலம் சி.ஏ.ஏ.வை கடுமையாக எதிர்க்கிறது.
சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் உக்கிரமடைந்த காலத்தில் கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் சி.ஏ.ஏ. போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை கையில் எடுக்க வடகிழக்கு மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பின் முதன்மை ஆலோசகர் சமுஜ்ஜல் குமார் பட்டாச்சார்யா கூறுகையில், வடகிழக்கு மாநில மக்கள் ஒருபோதும் சி.ஏ.ஏ.வை ஏற்க மாட்டோம். வடகிழக்கின் பூர்வகுடிகளை சிறுபான்மையாக்கிவிடும் சி.ஏ.ஏ. வடகிழக்கு மாநிலங்கள் சட்டவிரோத குடியேறிகளின் கிடங்காக மாற்றப்படுகிறது. இதனை நாங்கள் ஏற்க முடியாது என்றார். மேலும் சி.ஏ.ஏ.வை கைவிடும் வரை எங்களது போராட்டம் தொடரும்; வடகிழக்கு மாநிலங்களில் நாங்கள் உக்கிரமான போராட்டத்தைத் தொடருவோம் என்றார்.