260 கி.மீ. பயணித்து ஆற்றங்கரையில் கடலில் கலக்கும் வைகையின் இன்றைய நிலை.!

ஆறு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருந்துவரும் வைகை ஆறு நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஆறாக கருதப்படும் வைகை, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி சுமார் 260 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் அருகிலுள்ள ஆற்றங்கரை என்ற சிற்றூரில் கடலில் கலக்கிறது.
மேலும் முல்லை பெரியாறு அணையிலிருந்தும் வருசநாடு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியிலிருந்தும் வைகை ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து திறக்கப்படும் நீர் மூலம் மொத்தம் 24 அணைகள் வாயிலாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் வரையிலான நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆனால், எதிர்காலத்தில் இந்த நிலை மாறிவிடக்கூடும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
image
முன்பொரு காலத்தில் 600 மீட்டர் அகலத்திற்கு இருந்த வைகை நதி தற்போது ஆக்கிரமிப்புகளால் 195 மீட்டர் அளவுக்கு சுருங்கியிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் விளாங்குடி முதல் வண்டியூர் வெளிவட்டச் சாலை வரையிலான 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக வைகை ஆற்றை சுருக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் வைகை நதி ஓடையாக மாறினாலும் வியப்பதற்கில்லை என்று விவசாயிகளும் வைகை நதி மக்கள் இயக்கத்தினரும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் வைகையில் 2,000 கனஅடி நீர் வந்தாலே
வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை தடுக்க மதுரை மாவட்ட நிர்வாகம் வைகையாற்றில் ஆய்வு நடத்தி போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.