லாஸ் ஏஸ்சல்ஸ்,
1973-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில் ‘தி காட்பாதர்’ படத்துக்கு சிறந்த படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என 3 விருதுகள் கிடைத்தன. இந்த திரைப்படத்தில் புகழ்பெற்ற ‘விட்டோ கார்லியோனி’ கதாபாத்திரத்தில் நடித்திருந்த மார்லான் பிராண்டோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது விழா மேடையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றைய விருது விழாவில் மார்லான் பிராண்டோ கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சாஷீன் லிட்டில்ஃபெதர் என்ற பெண் மேடைக்கு வந்தார். நேராக மைக் முன்பு சென்று மார்லன் பிராண்டோவின் கடிதத்தை வாசிக்க தொடங்கினார்.
“திரைத்துறையில் அமெரிக்க பூர்விக குடிகள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதால் மார்லன் பிராண்டோ இந்த விருதை வாங்க மறுத்துவிட்டார்” என கூறிவிட்டு சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடையை விட்டு இறங்கினார். மார்லன் பிராண்டோவின் கடிதமும், சாஷீன் அதை வாசித்ததும் ஆஸ்கர் அரங்கை அதிரச் செய்தது.
இந்த சம்பவத்துக்கு பின்னர், அப்போது 26 வயதான சாஷீன் பல அவமதிப்புகளை எதிர்கொண்டார். அன்றைய ஆஸ்கர் விழாவின் போது ஜான் வெய்ன் என்ற நடிகர் சாஷீன் மீது தாக்குதல் நடத்தவும் முற்பட்டார். மேலும் அந்த விழாவில் பங்கேற்ற பலர், சாஷீனை அவமதிக்கும் நோக்கில் சைகைகளை செய்து, அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்வு நடந்து சுமார் 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது 75 வயதாகும் சாஷீனிடம் ஆஸ்கர் குழு மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக சாஷீனுக்கு ஆஸ்கர் குழுவின் முன்னாள் தலைவர் டேவிட் ரூபின் எழுதியுள்ள கடிதத்தில், “திரைத்துறையில் நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் எதிர்கொண்ட சுமையையும், இழப்பையும் ஈடு செய்ய முடியாது. உங்களது துணிச்சல் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக ஆழ்ந்த மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சாஷீன் லிட்டில்ஃபெதர், “ஆஸ்கர் குழு 50 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கோரியுள்ளது. பூர்வகுடி மக்களாகிய நாங்கள் மிகவும் பொறுமையானவர்கள். இந்த நாளை பார்க்கும் வரை நான் உயிருடன் இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வு நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்குள் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.