பிஜ்னோர்: உ.பி.யில் தங்கள் பகுதி மக்களுக்கு தேசியக் கொடி விநியோகம் செய்த அங்கன்வாடி பணியாளருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததால், அவரது குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரை அடுத்த கிராத்பூரைச் சேர்ந்த அன்னு (35) அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவரது கணவர் சிறு வியாபாரம் செய்து வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தங்கள் பகுதி மக்களுக்கு அன்னு தேசியக் கொடியை விநியோகம் செய்துள்ளார். இந்நிலையில், அன்னுவுக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதுகுறித்து அன்னுவின் கணவர் அருண் குமார் கூறும்போது, “அன்னு, தேசியக் கொடியை விநியோகம் செய்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டாம். விரைவில் உன்னுடைய தலையை வெட்டுவோம் என்ற வாசகம் அடங்கிய, கையால் எழுதப்பட்ட குறிப்பை எங்கள் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டி உள்ளனர். இதனால் நாங்கள் கவலை அடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளோம். இதுகுறித்து காவல் துறையில் புகார் செய்துள்ளோம். இதையடுத்து, எங்கள் வீட்டு முன்பு 24 மணி நேரமும் 4 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குறிப்பை ஒட்டியவரை போலீஸார் தேடி வருகின்றனர்” என்றார்.
இதனிடையே, அருண் குமார் புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பை ஒட்டியவர் தங்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.