ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ஊழியர் ஒருவர், அந்த நிறுவனத்திற்கு விசுவாசமாக வேலை செய்யவேண்டும் என்பது பொதுவான விதியாகும்.
நிறுவனம் கொடுக்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்ய வேண்டும் என்றும் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் வேலை செய்யக்கூடாது என்பது வேலை செய்பவர்களின் அறம் சார்ந்த உணர்வு ஆகும்.
ஆனால் ஒரு சிலர் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே அந்த நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவது, மோசடிகளில் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் ஊழியர்களின் மோசடி எந்த வகைகளில் இருக்கும்? அதை தடுப்பது எப்படி? என்பதை தற்போது பார்ப்போம்.
கட்டிப்பிடித்து விலா எலும்புகளை உடைத்த ஊழியர்.. இப்படி கூடவா நடக்கும்..?!

மோசடி வகைகள்
ஒரு நிறுவனத்தின் சொத்தை நிறுவன அதிகாரிகளுக்கும் உரிமையாளருக்கும் தெரியாமல் திருடுவது மற்றும் தவறான செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பது போன்ற மோசடிகள் அதிகம் இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளது. அதேபோல் ஒரு நிறுவனத்திற்கு பெற வேண்டிய பணத்தை தவறாக பயன்படுத்துவது மற்றும் ஊதியத்தையும் தாண்டி லஞ்சம் போன்ற வகைகளில் ஊழியர்கள் ஈடுபடுவது ஆகியவை ஊழியர்களின் மோசடி வகைகளில் சில என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் மோசடி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் நிலை குறைந்து விட்டதை அடுத்து மோசடிகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலையில் பல நிறுவனங்கள் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் தளர்த்தி உள்ளதன் காரணமாக மோசடி வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக தெரிகிறது.

நிதி நெருக்கடி
இதனையடுத்து அனுபவம் வாய்ந்தவர்களின் துணையால் ஊழியர்களின் மோசடியை கண்டறிந்து அதை தடுப்பது நிறுவனங்களுக்கு முக்கிய பணியாக உள்ளது. மூத்த பணியாளர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்வில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் போது பெரிய அளவிலான மோசடி செய்து வருவதாக ஊழியர்கள் குறித்த மோசடி குறித்த அறிக்கை கூறுகின்றது.

லஞ்சம் வாங்குதல்
ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல், நிறுவனத்தின் நிதியை மோசடி செய்தல், ஊழியர்களின் ஊதியத்தில் திருடுதல், டேட்டாக்களை திருடி அடுத்த கம்பெனிக்கு விற்பனை செய்தல், லஞ்சம், நிறுவனத்தின் ரகசியத்தை விற்பனை செய்தல், புதிதாக வேலைக்கு சேருபவர்களிடம் லஞ்சம் வாங்குதல் உள்பட பல்வேறு வகையான மோசடிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல்
பணியாளர்களின் மோசடியை கண்டறிந்து அவற்றை விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. பொதுவாக மோசடியை தடுப்பதற்கு அடிப்படை காரணம் ஒரு ஊழியரை வேலைக்கு எடுக்கும் போது முழுமையான விசாரணைக்கு பின்னரே பணியில் அமர்த்த வேண்டும். குறிப்பாக நேருக்குநேர் இண்டர்வியூ மிகவும் முக்கியம். இந்த நேர்காணலில் புதிதாக பணியமர்த்தப்படுபவர்களின் ஒழுக்க நெறிகளை தெரிந்து கொள்ளலாம்.

கண்காணிப்பு
ஊழியர்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். திடீரென ஒரு ஊழியர் அதிகப்படியான செலவு செய்தால், அவருக்கு அதிகப்படியான பணம் எப்படி வந்தது? என ஆய்வு செய்வதும் அவசியம். திடீர் ஆடம்பரம், திடீரென செய்யும் பெரிய செலவுகள் ஆகியவை மோசடி மூலம் கிடைத்த பணத்தால் ஏற்பட்டிருக்கலாம்.

விழிப்புணர்வு
மொத்தத்தில் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் மோசடி அதிகரித்து வருவதால் நிறுவன மேலதிகாரிகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் ஊழியர்களின் மோசடியால் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று இது குறித்து ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Employee Fraud on the rise: Know what it is and how to prevent it
Employee Fraud on the rise: Know what it is and how to prevent it |அதிகரித்து வரும் ஊழியர்களின் மோசடி: எவ்வாறு தடுப்பது?