ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தங்களது வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வெடித்து களேபரம் நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை, முதலில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதைத் தொடர்ந்து, நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. தனி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில், இ.பி.எஸ் தரப்பு ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார். மேலும், இனி பொதுக்குழு எப்படி கூட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். அதாவது பொதுக்குழுவை யாரும் தனியாக கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அதிமுக பொதுக்குழு கூட்ட சட்ட ஆணையரையும் நியமிக்க வேண்டும் என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும், அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை ஆண்டுக்கு ஒருமுறை தான் கூட்டவேண்டும். அதனால், அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை இந்த ஆண்டு இனி கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுடன் தான் பொதுக்குழு கூட்டப்படவேண்டும். ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லாது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பிலும் செய்யப்பட்ட புதிய பதவி நியமனங்கள் செல்லாது. கட்சியிலிருந்து நீக்கி இருதரப்பிலிருந்தும் நீக்கப்பட்ட உத்தரவுகளும் செல்லாது உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் அதிமுகவின் தலைமையைக் கைப்பற்ற முயற்சி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஆனால், ஓ.பி.எஸ் கசந்த காலங்கள் போய் இனி வரும் காலம் வசந்த காலங்களாக அமையட்டும் என்று இணைந்து செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஓ.பி.ஸ் உடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறிவிட்டார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில், இர் நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்வாரா என்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்தன.
இந்த நிலையில், ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, தங்களது வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு வழக்கும் ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”