“அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இலைக் கட்சி வட்டாரத்தில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. அதாவது, `எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்படியே தொடரும்’ என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாரம்சம். இந்தநிலையில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் முகாம்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மிகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11-ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்குத் தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓ.பி.எஸ். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11-ம் தேதி காலை பொதுக்குழு கூடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு, ஓபிஎஸ்-ஸின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
‘அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எங்கள் தரப்பு நியாயம் எதையுமே தனி நீதிபதி கருத்தில்கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி இந்தப் பொதுக்குழு நடந்திருக்கிறது. எனவே, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை `உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். நகல் கிடைத்த இரண்டு வாரத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்கவேண்டும்’ என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து நீதிபதியை மாற்றவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. பிறகு அதற்கு மன்னிப்பு கேட்கப்பட்டது. ஆனால், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே, இதுகுறித்து தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியதன் மூலம், ஜெயச்சந்திரன் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, “அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்குழுவை கூட்ட ஒரு சட்ட ஆணையரை கட்சி நியமிக்க வேண்டும். அதே போல, கட்சி சார்ந்து தனிக்கூட்டம் நடத்தக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வானது, இருதரப்பும் நியமித்த புதிய பொறுப்புகள், பலரைக் கட்சியை விட்டு நீக்கியது என எதுவுமே செல்லாது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய பின்னடவை உண்டாக்கியுள்ளது. அதேவேளை, பன்னீர் தரப்பில் இந்தத் தீர்ப்பை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்’ என அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பன்னீர். தொடர்ந்து ஜெயலலிதா சமாதிக்குச் சென்றவர், “இந்தத் தீர்ப்பை ஒன்றைரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம். யார் இந்த இயக்கத்தை பிளவுபடுத்த நினைத்தால் அது நடக்காது” என உற்சாகம் பொங்க பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார். அதேவேளை, எடப்பாடி வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலருடன் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இரண்டு அணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கிறது என்பது குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்..,
“கடந்த திங்கள்கிழமை காலையிலிருந்தே வழக்கறிஞர்கள், கட்சியின் வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் என தொடர்சியாக பலரை எடப்பாடி சந்தித்து ஆலோசனை செய்துவந்தார். உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தான் பொதுக்குழுவை நடத்தியிருக்கிறோம். அதனால், கண்டிப்பாக தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகத்தான் வரும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், தீர்ப்பு வேறுமாதிரியாக வந்திருக்கிறது. அடுத்தகட்டமாக இரண்டுபேர் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்வோம். அதிமுகவின் லீகல் விங்குடன் அதுகுறித்து எடப்பாடி ஆலோசனை நடத்தவுள்ளார். தவிர, அதிமுக தலைமைக் கழகம் தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதில் கிடைக்கும் தீர்ப்பின்மூலம் இந்த வழக்கில் எங்களுக்குச் சாதகமாக சில விஷயங்கள் நடக்கும். கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கிறது. அதனால் கட்சி எங்கள் கையை விட்டுப் போகாது” என்பதே எடப்பாடி தரப்பின் கருத்தாக இருக்கிறது.
ஓ.பி.எஸ் தரப்பிலோ, “நாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் தான் என்பது சட்டப்பூர்மாக நிரூபணமாகியுள்ளது. தலைமைக் கழக சாவி எடப்பாடி தரப்புக்கு ஒப்படைக்கப்பட்டது தொடர்பான வழக்குக்கும், தேர்தல் ஆணையத்திலும் எங்களுக்குச் சாதகமாக நடக்க இந்தத் தீர்ப்பு ஒன்றே போதும். பழைய நிலையே தொடரும் பட்சத்தில் இணக்கமாகச் செல்லலாம் என்றுதான் அண்ணன் ஓ.பி.எஸ் நினைக்கிறார். அதையேதான் அவர் பிரஸ் மீட்டிலும் வெளிப்படுத்தினார். ஆனால், கட்ந்த காலங்களில் இருந்தது போல விட்டுக் கொடுத்துக்கொண்டே இருக்கமாட்டார். தனக்கான நியாயமான பதவிகளைக் கேட்டுவாங்குவார். அண்ணன் தயவு இல்லாமல் கட்சி நடத்தமுடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. அவர்கள் மேல்முறையீட்டுக்குச் சென்றாலும் இந்தத் தீர்ப்பில் மாற்றம் இருக்காது” என்கிறார்கள் நம்பிக்கையாக.