மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி சட்டக் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவர் எஸ்.சசிகுமார். இவர் சட்டக் கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க வேண்டும், தமிழில் வகுப்புகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து சசிகுமாரை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து 27.7.2022-ல் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகுமார், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: “இந்தியா 76-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இருப்பினும் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. இது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
அரசு அலுவலகங்களில் தலைவர்கள் புகைப்படம் வைப்பது தொடர்பான விவகாரத்தில் அம்பேத்கர் உட்பட 9 தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் வைக்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி சட்டக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். சமூக நீதியின் அடையாளம். ஒவ்வொரு சட்ட மாணவருக்கும் அம்பேத்கர் முன்னுதாரணமாக திகழ்கிறார். அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்க சட்டக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து சட்டக் கல்லூரி முதல்வரிடம் கடிதம் அளித்துள்ளார். இடைநீக்கம் காரணமாக மனுதாரரால் 2 வாரம் வகுப்புக்கு செல்ல முடியவில்லை. அவருக்கு இந்த தண்டனை போதுமானது.
மனுதாரருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் நல வாரிய அறக்கட்டளை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அந்தப் பணத்தில் மனுதாரர் தேவையான சட்டப் புத்தகங்களை வாங்க வேண்டும். மனுதாரர் அடுத்த 2 ஆண்டுகள் அம்பேத்கரின் முதலாவது பொன்மொழியான ‘கற்பி’ என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
நீதிமன்ற அறையில் அம்பேத்கர் புகைப்படம் இல்லை. இந்த குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்” என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.