பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான பக்கிரிச்சி குளத்தை காணவில்லை என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் பட்டுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து குளம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் கட்டாயம் மீட்டு தரப்படும் என்று வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் நில அளவை மேற்கொண்ட போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த குளத்தை சுத்தம் செய்து அதனை சுற்றி நடைப்பாதை அமைப்பதற்காக பணி மேற்கொண்ட பொழுது குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்ததால் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலம் கண்டறியப்பட்டுள்ளது.