புதுடெல்லி: மத்திய மற்றும் மாநில அரசுகளின் நல உதவிகள், மானியங்களைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஆகஸ்டு 11- ம் தேதி அனைத்து மத்திய, மாநில துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரையில் அரசின் நல உதவிகள், மானியங்களைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை இல்லாத நபர், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது. ஆதார் சட்டப்பிரிவு 7-ல் இதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் யுஐடிஏஐ சில மாற்றங்களைக் கொண்டுவந் துள்ளது. அதன்படி, ஆதார் அட்டை இல்லாதவர் இனி அரசின் நல உதவிகளைப் பெற வேண்டுமென்றால், முதலில் அவர் ஆதார் அட்டைப் பெறுவதற்கு விண்ணப்பித்து ஆதார் பதிவு எண்ணைப் பெற வேண்டும்.
அந்த விண்ணப்ப ஒப்புகைச் சீட்டுடன், அவரிடமுள்ள ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் மட்டுமே இனி அரசு நல உதவிகள், மானியங்கள் அவருக்குக் கிடைக்கும். ஆதார் அட்டை வருவதற்கு சற்று நாட்கள் எடுக்கும் என்பதால் ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்த யுஐடிஏஐ கூறியுள்ளது. நல உதவிகள், மானியங்கள் மட்டுமல்லாது, அரசிடமிருந்து சான்றிதழ்கள் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.