வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோழிக்கோடு : ‘கேரள எழுத்தாளர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில், குற்றஞ்சாட்டிய பெண் பாலியல் இச்சையை துாண்டும் விதமாக ஆடை அணிந்து இருந்ததால், சட்டப்பிரிவு 354ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது’ என கருத்து தெரிவித்த நீதிமன்றம், எழுத்தாளருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்தவர், எழுத்தாளர் சிவிக் சந்திரன், 74. மாற்றுத் திறனாளியான இவர், கோழிக்கோடு மாவட்டம் கொயிலானி கடற்கரையில் வைத்து, 2020 பிப்ரவரியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் பெண் எழுத்தாளர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் அளிக்க கோரி எழுத்தாளர் சிவிக் சந்திரன், கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் கொடுத்துள்ள பெண், தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக் சந்திரன் இணைத்துள்ளார். இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு சமீபத்தில் முன் ஜாமின் வழங்கப்பட்டது.
அதற்கான உத்தரவு நகல் நேற்று வெளியானது. அதன் விபரம்:முன் ஜாமின் கோரி மனுதாரர் தாக்கல் செய்த மனு மற்றும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை, பாலியல் இச்சையை துாண்டும் வகையில் உள்ளது.
இந்நிலையில், 74 வயதான மாற்றுத்திறனாளி நபர், புகார் அளித்த பெண்ணை தன் மடியில் வலுக்கட்டாயமாக அமரவைத்து, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறுவதை நம்ப முடியவில்லை. எனவே, பாலியல் பலாத்கார வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 354ஏ, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது. எனவே, மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement