ஆரணி: ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், தொடர் முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த தலைவி பதவியை ரத்து செய்து, சென்னை கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், ஆரணிப்பாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிர்வாகக்குழு தலைவியாக அதிமுகவை சேர்ந்த குமுதவல்லி, துணைத்தலைவராக சைதை சுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் உட்பட 11 பேர் உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பும் பாலில் அதிகளவில் தண்ணீர் கலந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன், பிஎம்சி பொறுப்பாளர் பழனி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆவின் நிறுவனம் அபராதமும் விதித்தது. கடந்த 2018-2019ல் ஆவினுக்கு சொந்தமான கடையில் பொருட்கள் விற்பனை, மாட்டுத்தீவனம், பால் பாக்கெட்கள் விற்பனை, விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்தது, சங்க விதிகளை மீறி பணம் வாங்கி கொண்டு, வேலைக்கு அதிகப்படியான ஆட்கள் சேர்த்தது என அதிகாரிகளின் துணையோடு, பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வரும் சங்க தலைவி குமுதவல்லி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக, சென்னை கூடுதல் பால் ஆணையர் உத்தரவின்பேரில் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்த அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் பால் ஆணையருக்கு சமர்ப்பித்தனர். அதில், சங்க தலைவி குமுதவல்லி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலில் தண்ணீர் கலப்பது, பணம் கையாடல் செய்வது என தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்பட்டது. அதன்பேரில், அவரது தலைவி பதவியை ரத்து செய்து சென்னை கூடுதல் பால் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.