ரவுடிகளோடு சென்று அதிமுக தலைமையகத்தைத் தாக்கிச் சேதப்படுத்திச் சூறையாடியவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும் என வினவியுள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டுத் தலைமையாகச் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது எனத் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதவிதான் முக்கியம் என்றும், உழைக்காமல் பதவி வேண்டும் என அவர் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.
ரவுடிகளோடு சென்று அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தி அங்கிருந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் கொள்ளையடித்துச் சென்றதாகக் குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அப்படிப்பட்டவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும்? என வினவினார்.
ஓ.பன்னீர்செல்வத்தால்தான் அதிமுக ஆட்சி பறிபோனதாகவும், பதவிக்காக அவர் எதையும் செய்யத் துணிவார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம் என்றும், பொதுக்குழுவுக்குத் தான் உச்சப்பட்ச அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். இருமுறையும் சட்டப்படிதான் பொதுக்குழு கூடியதாகவும் தெரிவித்தார்.