சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் மிகப்பிரமாண்டமாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப் பிரபலங்களான ராதாரவி, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு, ரம்யா பாண்டியன்,ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறந்த திரைப்படத்திற்கான விருது இரவின் நிழல் படத்திற்காக இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது புதிய தலைமுறை ஆசிரியர் கார்த்திகை செல்வன், சன் நியூஸ் மூத்த உதவி ஆசிரியர் துரைப்பாண்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதேபோன்று இந்த ஆண்டுக்கான சிறந்த மக்கள் தொடர்பு அலுவலர்(PRO) விருது இந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர்களின் குரலில் பேசி ரோபோ சங்கர் நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு தர்பார் பட பாடலுக்கு நடனம் ஆடியும், ஜிவி பிரகாஷ் நடனமாடியபடி பாடல் பாடியும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் மேடையை அலங்கரித்தனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், அனைவரின் முன்பாக இந்தியன் அவார்ட்ஸ் விருதினைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உரையாற்றும் போது, நடிகராக இருந்த தான் தனது தந்தையின் மறைவுக்கு பின்பாக தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருவதாக கூறினார். அரசியலாக இருந்தாலும் வியாபாரமாக இருந்தாலும் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பின்னர் உரையாற்றிய பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், இந்த விருதைப்பெற 35 ஆண்டுகள் நிறைய வலிகளை தாங்கி, கஷ்டங்களை அனுபவித்ததாக கூறினார். நாம் ஒற்றுமையாக இணைந்திருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில் விருது உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியலுக்காக விருது வழங்கப்பட்டது இதுவே முதன்முறை என்று புகழ்ந்தார். அனைவரும் தயவு செய்து அரசியல் பேச வேண்டும் அரசியல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய சீமான், வாக்களிப்பதோடு நமது கடமை நிறைவடைவதில்லை என்றார்.