சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996 ம் ஆண்டு ரிலீசான படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
20 ஆண்டுகள் கழித்து ஷங்கரும் கமல்ஹாசனும் மீண்டும் ஒன்றிணைந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்தனர். 2017 ம் ஆண்டு இந்த படத்தின் தயாரிப்பு வேலைகள் துவங்கப்பட்டது.
ஆனால் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்ததால் 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா, லாக்டவுன், வழக்கு என தொடர்ந்து ஷுட்டிங் தள்ளி போனது.
இந்தியன் 2 விற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
2020 ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் இதுவரை மீண்டும் துவங்கப்படவில்லை. இதனால் எப்போது ஷுட்டிங் ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.இந்தியன் 2 படம் பற்றி படக்குழு எந்த தகவலையும் அறிவிக்காததால், இந்த படம் கைவிடப்பட்டதாக கூட வதந்தி பரவியது.

இவங்களுக்கு பதில் யார்
இதற்கிடையில் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்ததால், அவர்கள் நடித்த சீன்கள் வேறு நடிகர்களை வைத்து மீண்டும் எடுக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. குழந்தை பிறந்து சில மாதங்களே ஆனதால் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வாலும் படத்தில் இருந்து விலகியதாக தகவல் பரவியது.

அப்டேட் தந்த காஜல் அகர்வால்
ஆனால் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது தான் இந்தியன் 2 படத்தில் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும், நாங்கள் செப்டம்பர் 13 ம் தேதி இந்தியன் 2 ஷுட்டிங்கை மீண்டும் துவங்க போகிறோம் என அப்டேட் கொடுத்தார். ஆனால் இந்தியன் 2 ஷுட்டிங்கில் கலந்து கொள்ள சமீபத்தில் காஜல் அகர்வால் சென்னை வந்துள்ளதாக சொல்லப்பட்டது.

இவங்களும் நடிக்கிறாங்களா?
மற்றொரு தகவலாக இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்காக கமல், அமெரிக்கா சென்றிருப்பதாகவும், உயிரிழந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு நடித்த கேரக்டர்களில் நடிப்பதற்காக 1980 களின் டாப் ஹீரோக்களான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் சத்யராஜ் ஆகியோரிடம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் படக்குழு சார்பில் இன்னும் இதை உறுதி செய்யவில்லை.

இந்தியன் 2 ஷுட்டிங் இந்த தேதியிலா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, அமெரிக்கா சென்றுள்ள கமல் விரைவில் இந்தியா திரும்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் வந்ததும் ஆகஸ்ட் 22 ம் தேதி இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் ஆகஸ்ட் 24 ம் தேதி தான் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் மற்றொரு தகவல் பரவி வருகிறது.

எங்கு ஷுட்டிங் நடக்குது
இந்தியன் 2 படத்திற்காக சென்னையில் செட் அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டு வரும் இந்த செட்டில் தான் அடுத்த 2 மாதங்கள் இந்தியன் 2 ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சோஷியல் மீடியாவில் #Indian2 ஹேஷ்டேக் செம டிரெண்டாகி வருகிறது.

செம பிளான் போடும் ஷங்கர்
டைரக்டர் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் பைலிங்குவல் படமான ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார். முதலில் இந்தியன் 2 படத்திற்காக ஆர்சி 15 படத்தின் வேலைகளை ஷங்கர் தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களின் வேலைகளையும் அவர் கவனிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.