உலகிலேயே மிக நீளமான 7 கிலோ மீட்டர் நீளத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு ரயில் இயங்கி வரும் நிலையில் இந்தியாவின் மிக நீளமான ரயில் 3.5 கிலோ மீட்டர் நீளத்தில் சுதந்திர தினத்தன்று இயக்கப்பட்டது.
சூப்பர் வாசுகி என்ற இந்த ரயிலில் 295 வேகன்கள் மற்றும் 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இந்த ரயிலில் 27 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றப்பட்டது என்பதும் இதுவரை இயக்கப்பட்ட ரயில்களில் இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நீளமான ரயில்
இந்தியன் ரயில்வே பல்வேறு சாதனைகள் செய்து வரும் நிலையில் தற்போது இந்தியாவிலேயே மிக நீளமான ரயிலை இயக்கி சாதனை செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மற்றும் நாக்பூர் இடையே 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிச்செல்லும் 295 பெட்டிகளுடன் கூடிய ரயில் இயக்கப்பட்டது. 3.5 கிமீ நீளம் கொண்ட இந்த சரக்கு ரயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
சூப்பர் வாசுகி
சூப்பர் வாசுகிஎன்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் செல்லும் வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உலகின் மிக நீளமான ரயில்
ஆஸ்திரேலியாவிலுள்ள சரக்கு ரயில் ஒன்று 7.52 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்பதும் இது தான் உலகின் மிக நீளமான ரயில் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியாவின் மிக நீளமான ரயிலை, இந்தியன் ரயில்வே சுதந்திர தினத்தில் இயக்கி சாதனை செய்துள்ளது.
27,000 டன் நிலக்கரி
ஆகஸ்ட் 15ஆம் தேதி கோர்பாவில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் 267 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க கிட்டத்தட்ட 11 மணி நேரம் எடுத்துக் கொண்டது என்பதும், 27,000 டன் நிலக்கரியை ஏற்றி சென்ற இந்த ரயில், ஒரு ரயில் நிலையத்தை கடக்க சுமார் 4 நிமிடங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
3000 மெகாவாட் மின்சாரம்
சூப்பர் வாசுகி ரயிலில் எடுத்துச்சொல்லும் நிலக்கரியின் அளவில் நாடு முழுவதும் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு திறன் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாதாரண சரக்கு ரயில் ஒரு பயணத்தில் 9,000 டன் நிலக்கரியை எடுத்துச் செல்லும் நிலையில் சூப்பர் வாசுகி மூன்று மடங்கு நிலக்கரியை எடுத்து செல்லும் திறன் கொண்டது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்தடை
சூப்பர் வாசுகி சரக்கு ரயிலை அடிக்கடி பயன்படுத்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக மின்தடை நேரங்களில் அதிக அளவு நிலக்கரியை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல இந்த ரயிலை பயன்படுத்தப்போவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Meet Indian Railways’ Super Vasuki: India’s longest 3.5 km train with 6 Locos and 295 wagons
Meet Indian Railways’ Super Vasuki: India’s longest 3.5 km train with 295 wagons | இந்தியாவின் மிக நீளமான ரயில்… 295 வேகன்கள், 3.5 கிமீ நீளம்!