இந்தியாவில் வீடியோ லேன் நிறுவனம் டெவெலப் செய்த VLC மீடியா பிளேயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் சார்பில் ஆர்டிஐ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அரசு தரப்பில் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன என்பது வீடியோ லேன் நிறுவனத்திற்கு தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித நோட்டீஸும் இல்லாமல் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை கடந்த பிப்ரவரி முதல் எதிர்கொண்டு வருவதாகவும் வீடியோ லேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை விவகாரம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் சார்பில் ஆர்டிஐ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெலிகாம் துறையிடம் விளக்கம் கேட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அது மின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு மாறியுள்ளது.
‘எந்த தகவலும் கைவசம் இல்லை’ என தங்களது ஆர்டிஐ மனுவுக்கு பதில் கிடைத்ததாக இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தேசத்தை சேர்ந்த Cicada என்ற ஹேக்கிங் குழு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த தளத்தை பயன்படுத்தி சைபர் அட்டாக் செய்ததே இந்த தடைக்கு காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
இப்போது இந்த தளத்தை (www.videolan.org)அக்செஸ் செய்ய முடியவில்லை. மேலும் மீடியா பிளேயரை டவுன்லோட் செய்யவும் முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் VLC மீடியா பிளேயரை ஏற்கெனவே டவுன்லோட் செய்து பயன்படுத்தி வரும் பயனர்கள் வழக்கம் போல எந்த சிக்கலும் இல்லாமல் இதனை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.