பீகாரைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் பிருத்வி ராஜ் சிங் என்பவர், தன் மனைவியுடன் பெங்களூரில் வசித்துவந்திருக்கிறார். பிருத்வி ராஜ் சிங்கின் மனைவி, அவரைவிடவும் 10 வயது பெரியவர் என்று கூறப்படுகிறது. கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, பிருத்வி ராஜின் மனைவி அவருடன் உடலுறவுகொள்ள மறுப்பு தெரிவித்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிருத்வி ராஜ் சிங், தன் மனைவியைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார்.

அதன்படி ஆகஸ்ட் 3-ம் தேதியன்று உடாபிக்கு பிருத்வி ராஜ் சிங், தன் மனைவியுடன் காரில் சென்றிருக்கிறார். பின்னர் வழியிலேயே தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மனைவியைக் கொலைசெய்துவிட்டு, ஷீரடி காட் பகுதியில் உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் பிறகு பிருத்வி ராஜ் சிங் தாமாகவே, தன் மனைவி காணாமல்போய்விட்டதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதில் சந்தேகமடைந்த போலீஸார், பிருத்வி ராஜ் சிங்கைக் கைதுசெய்து விசாரித்தனர்.

விசாரணையில் பிருத்வி ராஜ் சிங், “எங்களின் திருமணத்தின்போது அவளுக்கு 28 வயது என்றுதான் சொன்னார்கள். பின்னர்தான் அவள் என்னைவிட 10 வயது பெரியவள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவள் ஒருபோதும் உடலுறவுக்கு இணங்கவேயில்லை. அதுமட்டுமல்லாமல் என்னையும், என் பெற்றோரையும் கடுமையாக அவமானப்படுத்தினாள்” என்று கூறினார். இறுதியில் பிருத்வி ராஜ் சிங்கின் மனைவி கொலைசெய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த போலீஸார், அழுகிய நிலையில் உடலை மீட்டனர். அதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக உடலை, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.