அதிமுகவில் ஜூன் – 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்றும், தற்காலிக அவைத்தலைவரால் பொதுக்குழுவை கூட்ட முடியாது எனவும் புதன்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த சிறு வெற்றி என்றும், ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு என்று கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்த தீர்ப்பு மூலம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்புகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
தீர்ப்புக்குப் பிறகு, ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம், அதிமுகவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்றும், கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக இந்த தீர்ப்பை வழங்குகிறோம் எனவும் தெரிவித்தார். அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
“நடுநிலையாகவே இருக்கிறேன்”
இது குறித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் கூறுகையில், இந்த விவகாரத்தில் நான் நடுநிலையாக இருக்கவே விரும்புகிறேன். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு நம்மால் என்ன செய்ய முடியும்? நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தான் ஆக வேண்டும்.”, என்கிறார். “அதிமுகவின் எதிர்காலம் என்ன?”
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சென்னைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், இருதரப்பு மோதலில் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்று கூறுகிறார்.
“இது ஒரு நாளில் முடியும் பிரச்னை அல்ல. தினமும் அதிமுகவின் விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தால், கட்சியின் நிலை என்ன? தொண்டன் எங்கு இருக்கப் போகிறான்? என்பது பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.
இந்த ஒரு தீர்ப்பால், எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவுதான். ஆனால், எதிர்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி, ஓர் அரசை எதிர்த்து போராட்ட வேண்டும், பொது பிரச்னை தொடர்பாக ஒரு முடிவு எடுக்க வேண்டுமானால், இவர்கள் எப்படி முடிவு எடுப்பார்கள்?
தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும் கட்சி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி அதிமுக. ஆனால், அந்த அந்துஸ்த்துக்கு இவர்களே தடையாக இருக்கிறார்கள்.
- டெல்லியில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன?
- அதிமுக சர்ச்சை: ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே நீடிக்கும் – உயர் நீதிமன்றம்
- மு.க. ஸ்டாலின் நரேந்திர மோதிக்கு அளித்த ‘அந்த’ பரிசு பெட்டி – முழு விவரம்
இந்த விவகாரம், இப்படியே நீடித்தது எனில், 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கட்சி தொடர்பாக அனைத்து முடிவுகளும் பாஜக எடுக்கும் நிலை உருவாகிவிடும். ஒருவர் பாஜகவின் முழு ஆதரவுடன் இருக்கிறார், மற்றொருவர் பாஜகவின் அரைகுறை ஆதரவுடன் இருக்கிறார்”இந்த நிலையில் அதிமுகவின் எதிர்காலம் எங்கு இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்கிறார் அவர்.
அதிமுக கட்சிக்குள் சமரசமாக செல்லும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் ஓ.பன்னீர்செல்வம் செல்வதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால், ஜூன் 23ம் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பே, ஒற்றை தலைமையை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராகிவிட்டார்கள். அந்த பொதுக்குழு கூட்டம் யாராவது, ஓ. பன்னீர் செல்வம் இரண்டாவது தலைமையாக இருந்து விட்டு போகட்டும் என்று கூறியிருந்தால், அன்று எடப்பாடி கேட்டு இருக்க வாய்ப்பு இருந்து இருக்கலாம். ஆனால், தற்போது அத்தகைய வாய்ப்பு இல்லை,” என்கிறார் குபேந்திரன்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செல்லவுள்ளது. இரண்டு தலைமைக்கு நடக்கும் மோதலில் கட்சியின் நிலை என்னாகும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
https://www.youtube.com/watch?v=rpAcbZY8GJQ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்