அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவில் தனது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ஓபிஎஸ் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், நடத்தப்பட்ட செயற்குழு செல்லாது எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்ற பின் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனு இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனு வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 22ஆம் தேதி) அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய கேவியட் மனு ஓ.பி.எஸ். தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனுவுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் கேவியட் மனுவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 22) எடப்பாடி பழனிசாமி மனு ஏற்கப்படும்பட்சத்தில், அடுத்த ஓரிரு நாட்களில் அவரது பிரதான மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM