புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் 4 லட்சத்து 67 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவார காலமாக நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாநதியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் மாகாணத்தில் தீரத்தில் அமைந்துள்ள சம்பல்பூர், ஜகத்சிங்பூர், கேந்திரபாலா, பூரே, குர்தா மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
சம்பல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிகவும் நீளமான அணையான ஹிராகுட் அணையில் நேற்று இரவு நிலவரப்படி 5 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 40 மதகுகளில் இருந்து வினாடிக்கு 6 லட்சத்து 69 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 1,757 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4 லட்சத்து 67 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டுமே 60,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒடிசாவில் இன்னும் 425 கிராமங்களில் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் சிக்கிக்கொண்டுள்ளனர். 11 தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு படையினரும், மாநில பேரிடர் துரித நடவடிக்கை படையை சேர்ந்த 52 குழுவினரும் மீட்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமுள்ள 30 மாவட்டங்களில், 20 மாவட்டங்கள் இன்று முதல் கனமழையை எதிர்கொள்ளும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை 17 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.