குடிபோதையில் மனைவியை கொலைசெய்த நபருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை, 7ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள உள்ளூர் கிராமத்தில் அய்யாசாமி மற்றும் அவரது மனைவி மலர்விழி வசித்து வந்துள்ளனர். இவர்களின் இரண்டு மகன்களும் திருச்சி மற்றும் சென்னையிக் வேலை பார்த்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்காக இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அய்யாசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், அய்யாசாமிக்கும் மலர்வழிக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது அதில், ஆத்திரமடைந்த அய்யாசாமி, மலர்விழியை அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கியதால் மலர்விழி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மகிளா நீதிமன்றம் 2017ல் அய்யாசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அய்யாசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, “மனுதாரர் தொடர்ச்சியாக குடிப்பழக்கம் உடையவர். மேலும் நேரில் கண்ட அவரது மகன்களின் சாட்சிகளின் அடிப்படையில், மனுதாரர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் மனுதாரர் இந்த சம்பவத்தின் போது, எவ்விதமான ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை. இதனால், கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இச்ச சம்பவத்தை அய்யாச்சாமி செய்யவில்லை என்பது தெரியவருகின்றது.
ஆகவே, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. முன்கூட்டிய விடுதலை இன்றி, 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
