நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தேயிலை தோட்டம் மற்றும் வீடுகளில் திடீர் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளன. கூடலூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தெய்வமலை செல்லும் சாலையில் சுமார் 70மீட்டர் தூரத்திற்கு திடீர் விரிசலும், 10 செ.மீ. ஆழத்திற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல நடுக்கூடலூர் பகுதியில் 20கும் மேற்பட்ட வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். இந்த இடங்களில் புவியியல் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்திய மண்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணனும் ஆய்வில் ஈடுப்பட்டார். சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் நிலத்திற்கு அடியில் நீரோட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த விரிசல்கள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நீரோடைகள் மாற்று பாதைகளில் திருப்பவில்லை என்றால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், சேதம் அடைந்த வீடுகளை முழுவதுமாக இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டுவது தான் பாதுகாப்பு என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.