புதுடெல்லி: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகம், ஸ்டேன்போர்டு மருத்துவ பல்கலைக் கழகம், பெர்க்கிலி பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த தேசிய அறக்கட்டளை ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கொரோனா பலிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 162 நகராட்சிகளில் 90 நகராட்சிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள்,‘பிளோஸ் குளோபல்’என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், ‘இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு 10,098 பேர் பலியானதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஆய்வு நடத்திய 90 நகராட்சிகளில் மட்டுமே கூடுதலாக 21 ஆயிரத்து 300 பேர் பலியாகி உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் வேறு எந்த பெருந்தொற்றும் ஏற்படவில்லை. எனவே, கொரோனாவால்தான் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கும்,’என கூறப்பட்டுள்ளது.