இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மிக் (MIC) விமான கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், எதிர்வரும் 24ம் தேதி அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
- சீன கப்பல் வருகையும், அதானி நிறுவனத்தின் இலங்கை பிரவேசமும்
- இலங்கையில் சீன கப்பல் – இந்திய கடல் பகுதியில் தீவிரம் அடைந்த கண்காணிப்பு
- ‘களைக்கொல்லிக்கு’ இலங்கையில் மீண்டும் அனுமதி – முன்பு தடை, இப்போது ஒப்புதல் ஏன்?
நாட்டிற்கு வருகைத் தரும் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்காக சேவையாற்ற எதிர்பார்த்துள்ளதாக கூறிய அவர், அரசியலில் அவர் ஈடுபட போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதி என்ற விதத்தில் திறமையானவர் கிடையாது எனவும், நிர்வாகியாக திறமையானவர் எனவும் அவர் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் தேதி நாடு திரும்புகின்றார் என்பதை பொறுப்புடனான கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
”சில சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் வரலாம். இன்று பொறுப்புடன் கூறுகின்றேன். நாளை சில வேளைகளில் மாற்றம் வரலாம். அவர் தேதியை மாற்றினால், ஒன்றும் செய்ய முடியாது” என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து, மக்கள் சுமார் நான்கு மாத காலம் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்த போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி கொழும்பை லட்சக்கணக்கான மக்கள் சுற்றி வளைத்து, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர்.
இதையடுத்து, தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த மாதம் 13ம் தேதி மாலைத்தீவு சென்று, அங்கிருந்து 14ம் தேதி சிங்கப்பூர் பயணமானார்.
சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்தார்.
அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து கடந்த 11ம் தேதி தாய்லாந்து நோக்கி தனது மனைவியுடன் பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது அங்கு தங்கியுள்ளார்.
வெளிநாட்டில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் செலவீனங்கள் அனைத்தும், அவரது சொந்த பணத்திலேயே செலவிடப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்