இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், “அடக்குமுறையால் அச்சுறுத்தல் செய்யும் ஸ்டாலின் சர்வாதிகாரியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த, பாஜக மாநில துணைத்தலைவர் திரு.கே.பி.ராமலிங்கம் அவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, மாநில அரசின் முறையான, அனுமதி பெற்று, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது, பூட்டப்பட்டிருந்த அந்த வளாகத்தைத் திறந்து நினைவிடத்துக்குள் சென்றார் என்ற காரணத்திற்காக ஒரு கொடுங்குற்றவாளியை நடத்தும் விதத்தில், மாற்றுக் கட்சியினரை அச்சுறுத்தும் வகையிலே, மாநில அரசு நடந்து கொள்வது என்பது ஸ்டாலின் அவர்கள் வெளிப்படுத்தும் சர்வாதிகாரம்.
அப்படி, பாரத மாதாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால், அதை மீண்டும், மீண்டும் செய்ய, நாங்கள் எப்போதும் அஞ்ச மாட்டோம். சர்வாதிகாரி மு.க.ஸ்டாலின், உங்கள் அடக்கு முறையை, அராஜகங்களை எல்லாம் தமிழக மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப ஆட்சியில் கோலாச்சிக் கொண்டிருந்த உங்களின், அடுத்த பரிமாணமே இந்த சர்வாதிகாரம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், காவல் துறையினரால் எங்களைத் துன்புறுத்தலாம். ஆனால் காலமும் காட்சியும் மாறும் என்பதை மறந்துவிடாதீர்கள். எங்கள் கட்சியின் அடிமட்டத்தொண்டன் கூட உங்கள் அடக்குமுறை சர்வாதிகாரப் போக்கினைக் கண்டு அஞ்சமாட்டான். நினைவில் கொள்ளுங்கள். யாரும் தொட்டுவிடமுடியாத உயரத்தில் உங்கள் சிம்மாசனம் இருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம்.
உங்களை அந்தச் சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை, தமிழக மக்களின் குரலாக, எங்கள் குரல் மணியாக ஒங்கி ஒலிக்கும். மருத்துவமனையில் தற்போது இதயநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள கே.பி.ராமலிங்கம் அவர்கள், உடல் நலம் சீரடையும் முன்னர், மருத்துவர்கள் தடுத்தும், துன்புறுத்தி சிறைக்கு ஸ்டெச்சரில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரின் உடல்நலத்திற்கும், உயிருக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.