சாலையில் அள்ளிப்போடப்பட்ட சாக்கடை கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி!

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், பரலி நெல்லையப்பர் தெருவில் வெள்ள நீர் வடிகால்வாய் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.  சுத்தானந்தபாரதி தெருவில் இருந்து பரலி நெல்லையப்பர் தெரு, செங்கேணியம்மன் கோயில் தெரு வழியாக சென்று நல்லேரிக்கு போய் சேர வேண்டும். மேலும் இதில் ரயில்வே நிர்வாகம் கழிவுநீரை விடுவதால் ஏரியில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் கால்வாயில் இருந்த சாக்கடை கழிவுகளை முறையாக லாரிகள் மூலம் அகற்றாமல் அதனை அள்ளி சாலையில் பொறுப்பற்ற முறையில் மலைபோல் குவியல்,குவியலாக சாலை முழுவதும் கொட்டி விட்டு சென்றனர்.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் இப்பகுதியில் மூன்று பள்ளிகள் இருப்பதால் பள்ளி மாணவர்கள் கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர். சில மாணவர்கள் சாக்கடை சேற்றில் ஷீ சிக்கியும், கடந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது.  இதனால் ஷீ, சாக்ஸ், சீருடைகள் முழுவதும் சகதியானதால் மன உளைச்சலோடு பள்ளிக்கு சென்றனர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க மண்டலம் 5ல் உதவி பொறியாளர் பிரதாப் சந்திரன் அவர்களையும், தாம்பரம் மேயர் வசந்தகுமாரியை  தொடர்பு கொண்ட போதும் அழைப்பை ஏற்கவில்லை. 63 வதுவார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜோதிகுமாரை தொடர்பு கொண்டு கேட்ட போது ஆளும் கட்சி கவுன்சிலரான தான் கூறும் எந்த பணியையும் அதிகாரிகள் செய்ய மறுப்பதாகவும், மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறார்கள். மக்களை திரட்டி போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.