புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள், தொழிற்கல்வி, நுண்கலையியல், லேட்ரல் என்ட்ரி பி.டெக்., உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்பு என, நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளில் மொத்தம் 10,804 இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு கடந்த ஜூலை 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை, சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பிளஸ் 2 முடித்த மாணவ மாணவிகள், கல்வி மற்றும் வருவாய் துறை சான்றிதழ்களை இணைத்து ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
13,968 பேர் விண்ணப்பம்
‘நீட்’ மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 16,820 பேர் ஆன்-லைனில் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 13,968 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சமர்ப்பித்து உள்ளனர்.கலை படிப்புகளுக்கு மட்டும் 4,568 பேரும், தொழில் படிப்புகளுக்கு 5,683 பேர், கலை மற்றும் தொழில் படிப்புகளுக்கு இணைந்து 3,717 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பித்துள்ள 13,968 மாணவர்களில், 11,051 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 2,950 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதுதவிர, என்.ஆர்.,-3, என்.ஆர்., ஸ்பான்சர்டு-3 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரைவு தரவரிசை பட்டியல்
விண்ணப்பங்களை பரிசீலித்து, வரைவு தர வரிசை பட்டியல் தயாரிக்கும் பணியில் சென்டாக் நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.ஒட்டுமொத்தமாகவும், படிப்பு வாரியாக தனித்தனியாகவும் வரைவு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
இப்பணி இப்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் நான்கு நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என்பதால், 23 ம் தேதிக்குள் வரைவு மெரிட் லிஸ்ட் வெளியிட ‘சென்டாக்’ திட்டமிட்டுள்ளது.
திருத்தம் செய்ய வாய்ப்பு
இந்த வரைவு மெரிட் லிஸ்ட்டில் திருத்தங்கள் செய்து கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும்போது மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான வருவாய் துறை சான்றிதழ் கிடைக்காமல் இருந்திருக்கும். இத்தகைய மாணவர்கள் வரைவு மெரிட் லிஸ்ட் வெளியாகும்போது, கொடுக்கப்படும் இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி, ஆட்சேபனை ஏதும் இருப்பின் தெரிவித்து, சரி செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு சீட்டினை உறுதி செய்து கொள்ளலாம். மெரிட் லிஸ்ட்டில் தவறு இருந்தாலும் சென்டாக்கிற்கு அதனை சுட்டிக்காட்டி சரி செய்து, சீட்டினை பெறலாம்.இதேபோல், சென்டாக் அறிவுறுத்தும் தவறுகளையும் மாணவர்கள் சரி செய்து கொள்ளலாம்.
இதற்காக மூன்று நாட்களை ஒதுக்கிட, சென்டாக் நிர்வாகம் திட்டமிட்டு பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது.வரைவு மெரிட் லிஸ்ட் வெளியிட்ட படிப்புகளுக்கு, இம்மாதத்திற்குள் கணினி வழியாக முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி இடங்களை ஒதுக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்