ஹராரே,
இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹர், அக்சர் பட்டேல், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர். சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தீபக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ராகுல், “ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது. இன்று பிட்ச் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் சரியான பகுதிகளில் பந்து வீசியதை பார்க்க நன்றாக இருந்தது. எங்கள் அணியினர் சிறப்பாக பந்துவீசினர்.
விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம். களத்தில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக விஷயம். நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம். காயங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்கும்” என்று ராகுல் தெரிவித்தார்.