”நமக்குள் போட்டியைத் தவிர்த்து, அதிமுகவின் வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஒற்றுமையாய் பணியாற்றுங்கள். எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட இயக்கம் பெரிது. இரவு, பகல் பாராமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்ற வேண்டும்” என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய வார்த்தை பழுதாகிவிட்டது. சம்பிரதாயத்துக்கு தலைவர்களின் மந்திரங்களை கூறுகிறார்களே தவிர, நாற்காலிக்கு போட்டி போட்டு கட்சியில் பிளவு ஏற்படுவதற்கும், பெட்டிகளோடு எம்எல்ஏக்கள் கை மாறுவதற்கும் இரு ‘எஸ்’களும் வழியை ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அண்மையில் கூடிய பொதுக்குழு செல்லாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இணைந்து செயல்படலாம் வாருங்கள் என எடப்பாடிக்கு
அழைப்பு விடுத்தும் எடப்பாடியால் அதை ஏற்க முடியவில்லை. ருசி கண்ட பூனையாக முதல்வர் பதவிக்கும், தலைமை பொறுப்புக்கும் தேனிக்காரர் ஆசைப்பட, கட்சிக்காகவும் உழைக்காமல், சோதனை காலங்களில் தோல் கொடுக்காமல் பதவியை மட்டுமே எதிர்பார்க்கும் ஒருவரை கட்சியில் எப்படி அங்கீகாரம் கொடுக்க இயலும் என ஈபிஎஸ் குமுறுகிறார்.
இப்படியே போனால், பாஜகவின் துணைகொண்டு தினகரன் க்ரூப் உள்ளே நுழைந்துவிடுமோ என்ற கவலையும் ஈபிஎஸ்க்கு வந்துவிட்டதாம்… சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜகவால் நிற்க முடியாது. ஒன்று, அதிமுக பழைய நிலைமைக்கு வரவேண்டும்… இல்லையென்றால் உடைந்த படகில் பெரிய பகுதியை தேடி அதில் சவாரி செய்யவேண்டிய நிலைமைதான். இதில் இரண்டு தான் பாஜகவின் ஆப்ஷனாகவும் இருக்கும்…
ஒருவேளை ஓபிஎஸ் உடன் சமாதானமாகி மீண்டும் கட்சியை வழி நடத்தி சென்றால், எங்கு மீண்டும் ஸ்லீப்பர் செல்கள் ஆப்ரேஷன் நடந்து விடுமோ என்ற அச்சமும் சேலத்துக்காரருக்கு உள்ளது.
அரசியலில், பகட்டு அரசியல் என்று ஒரு விதம் உள்ளது. எந்த வேலையையும் செய்யாமல், சொந்த வேலைகளை மட்டுமே பார்த்துவிட்டு, தலைவர் வந்தவுடனே கடனுக்கு ஒரு துண்டை வாங்கி வந்து மேடையில் ஏறி தலைவருக்கு போர்த்திவிட்டு அரசியல் செய்வதை பகட்டு அரசியல் என்பர்.
இந்த அரசியலுக்கும், ஜெ.,வின் மந்திரத்துக்கும் நடுவே சிக்கிய எலியாகத்தான் ஈபிஎஸ் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரம் சொல்கிறது.