திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தவர். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர் நெல்லை கண்ணன் . இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று உடல்நலக் குறைவினாலும் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் மறைவிற்கு திராவிட கழக தலைவர் கி. வீரமணி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிறந்த தமிழ் அறிஞரும், சமூகப் பார்வையுடன் கூடிய முற்போக்குச் சிந்தனையாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளரும், துணிவுடன் எந்த மேடையிலும் பேசும் ஆற்றலாளருமான நண்பர் நெல்லை கண்ணன் அவர்கள்(வயது 78) வயது முதிர்வு காரணமாக நெல்லையில் இன்று (18.8.2022) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
தமிழ்நாடு ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது.அவரது இடத்தை எவரும் எளிதில் நிரப்ப இயலாது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.