தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை கண்ணன், காமராசர், கண்ணதாசன் என தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர். இலக்கியப் பேச்சாளராகவும் பட்டிமன்ற நடுவராக தமிழ்நாடு முழுவதும் தனது பேச்சாற்றாளால் மக்களைக் கவர்ந்தவர். தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் தீவிர பற்றுகொண்ட அவரை தமிழ்கடல் நெல்லை கண்ணன் என்று மரியாதையுடன் அழைத்தனர். நெல்லை கண்ணன் பேச்சாளராக மட்டுமில்லாமல், அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டவர்.
நெல்லை கண்ணன் வயது முதுமை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழ் இருக்கும் என்று கூறினார். நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ தழுத்த குரலில் அவரைப் பற்றி பேசினார்.
அப்போது வைகோ கூறியதாவது: “இலக்கியவாதி நெல்லை கண்ணன் உடல்நல குறைவால் காலமானதை தொடர்ந்து அவரது உடல் நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆன வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான் சமய நிகழ்ச்சியாக இருந்தாலும் பட்டிமன்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார் இந்த வீட்டிற்கு ராஜீவ் காந்தி வந்து உணவருதி விட்டுச் சென்றதாகவும் என்னிடம் தெரிவித்தார் காமராஜரை தனது அரசியல் வாழ்வில் கொள்கையாக கொண்டு செயல்பட்டவர் அவரது இழப்பு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.” என்று கூறினார்.
முன்னதாக, தமிழக அரசு சார்பில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் நெல்லை டவுன் அம்பாள் சன்னதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில், நெல்லை கண்ணன் மறைவு செய்தி கேட்டு முதல்வர் அதிர்ச்சி கலந்த வருத்தம் அடைந்தார். உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரண்டு அமைச்சர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
தமிழ் இலக்கியவாதியும் தமிழ்சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் மறைந்தது வருத்தமளிக்கிறது. முதல்வரும் நெல்லை கண்ணன் குடும்பத்தார் துக்கத்தில் பங்கெடுத்துள்ளார். முதல்வர் சார்பிலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”