திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள கரட்டுப்பட்டி, பாப்பணம்பட்டி ‌கசவனம்பட்டி, மேல் திப்பம்பட்டி, கரட்டுப்பட்டி, குஞ்சனம்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, மைலாப்பூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் புடலங்காய், வெங்காயம், பாகற்காய், பச்சை மிளகாய், அவரக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். குறிப்பாக கரட்டுப்பட்டி பகுதியில் ‌சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 60 ஆயிரம் செலவில் புடலங்காய் நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். பந்தல் சாகுபடியை பொறுத்தவரை ஆரம்பகட்ட முதலீடு அதிகளவில் இருக்கும் என்பதால், பல விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

கரட்டுப்பட்டி  பகுதியில் பந்தல் மூலம் புடலங்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி வேல்முருகன் கூறியதாவது: கொடி வகைப்பயிரான புடலங்காய் வேகமாக வளர கூடியது மட்டுமின்றி, அதிக மகசூல் தரக் கூடியதாகவும் உள்ளது. அத்துடன் சந்தைப்படுத்துவதும் எளிதாக இருக்கும் என்ற வகையில் புடலங்காய் சாகுபடியைத் தேர்வு செய்துள்ளேன். டிசம்பர்-ஜனவரி மற்றும் ஜூன்-ஜூலை மாதங்கள் புடலங்காய் சாகுபடிக்கு ஏற்ற காலங்களாகும்.

ஒரு ஏக்கரில் புடலை நடவு செய்ய 600 கிராம் முதல் 800 கிராம் வரை விதைகள் போதுமானதாகும். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை ஊன்றியவுடன் பூவாளி அல்லது குடம் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாட்களில் முளைத்து விடும். செடி சற்று வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.

ஒவ்வொரு குழியிலும் நல்ல சீரான வளர்ச்சி பெற்ற 3 நாற்றுக்களை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை பிடுங்கி விடலாம். செடி முளைத்து கொடியாக படர தொடங்கும் போது மூங்கில் குச்சிகள் உதவியுடன் பந்தலில் படர விட வேண்டும். புடலையில் பூசணி வண்டு மற்றும் பழ ஈக்களின் தாக்குதல் தென்பட்டால் தோட்டக்கலைத்துறையினரின் ஆலோசனை பெற்று மருந்துகள் தெளிக்கலாம்.

தற்போது அதிகளவில் பூக்கள் பூத்துள்ளள. விதைத்து 80 நாட்கள் முதல் அறுவடை செய்யத் தொடங்கலாம். ஒரு ஏக்கருக்கு 8 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். பொதுவாக புடலங்காய்க்கு சீரான விலை கிடைத்து வருகிறது. முதல் முறை பந்தல் அமைப்பதற்கு முதலீடு செய்து விட்டால் பல ஆண்டுகள் இதனைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள முடியும். பந்தல் அமைக்க அரசு மானியம் வழங்கினால், விவசாயிகள் அதனைப்பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.