
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்தியா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛திருச்சிற்றம்பலம்'. அனிருத் இசை அமைத்திருக்கிறார். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக இப்படம் வெளியான தியேட்டர்களில் தனுஷின் ரசிகர்கள் தாரை தப்பட்டை அடித்தபடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.
குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது தனது மகன்கள் மற்றும் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தார் தனுஷ். அவர் மட்டுமின்றி இப்படத்தின் இயக்குனர் மித்ரன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை ராஷி கண்ணா ஆகியோரும் ரோகினி தியேட்டரில் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து ரசித்தார்கள்.