திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, காலை 4 மணிக்கு கொடி பட்டம் பல்லக்கில் முக்கிய வீதிகள் வலம் வந்து 4.30 மணிக்கு கோயிலில் உள்ள கொடி மரத்திற்கு வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 5.40 மணிக்கு அரிகரசுப்பிரமணியன் பட்டர் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் ரூ.மத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10ம் திருவிழாவான 26ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு முதலில் விநாயகர், சுவாமி, அம்பாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன.