ஆவடி: அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகச்சீரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் பெற்றோர் நிம்மதியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, வீராபுரம் ஸ்ரீ வாரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் – சவுபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகளான டானியா (9), அங்குள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
எல்லா குழந்தைகளைப் போல் இயல்பாக வளர்ந்து வந்த டானியாவுக்கு 3 வயதுக்குப் பிறகு முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும், அந்த பாதிப்பு நீங்காததால், டானியாவின் பெற்றோர், கடந்த 6 ஆண்டுகளாக பல அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர். இருப்பினும் எந்தப் பலனுமில்லை.
நாட்கள் போகப்போக டானியாவின் முகத்தின் ஒரு பகுதி, வலது கண், தாடை, உதடு என அடுத்தடுத்த உறுப்புகள் சிதையத் தொடங்கின. இதனால் டானியாவின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக டானியா படிக்கும் பள்ளியில் சக மாணவர்களே அவரை வெறுத்து ஒதுக்கி வந்ததாக தெரிகிறது.
அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களும் டானியாவை வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.அதுமட்டுமல்லாமல், அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட டானியாவின் மருத்துவச் செலவுக்காக ஏற்கெனவே ரூ. 10 லட்சத்துக்கு மேல் அவரது பெற்றோர் செலவு செய்தனர். தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் அதற்கு பணமில்லாமல் அவதியுற்று வந்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான இணை இயக்குநர் இளங்கோவன், சுகாதாரத் துறை துணை ஜவகர்லால் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர் பெற்றோரிடம் பேசிய ஆட்சியர், டானியாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்திசை’ யிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறும்போது, “டானியாவுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம், தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.
ஆட்சியரின் மனிதாபிமானமிக்க இந்த நடவடிக்கையால் சிறுமியின்
பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட டானியாவின் வீட்டுக்குச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அதிகாரிகள்.(உள்படம்) சிறுமி டானியா.