புதுடெல்லி: தேர்தலில் இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த பொதுநலன் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உதவிக்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஹன்சாரியா, ‘இந்த விவகாரத்தில் முதலில் ஒரு குழு அமைக்க வேண்டும். மாநிலங்களின் பொருளாதார நிலை குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்,’ என தெரிவித்தார்.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘இந்தியா என்பது ஒரு சோசலிச நாடு. ஆனால், அதனை முதலாளித்துவ நாடாக மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இந்த வழக்கில் எங்களையும் இடையீட்டு மனுதாரராக ஏற்க வேண்டும்,’ என தெரிவித்தார். அவருடைய கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘நாங்கள் அனைத்து சமூக நல திட்டத்தையும் எதிர்க்கவில்லை. மாறாக, சமூகநல திட்டங்கள் என்ற பெயரில் அனைத்தையும் இலவசமாக வழங்குவது ஏற்க கூடியதல்ல. அவ்வாறு செய்வது, சமூக நல திட்டத்திற்கு எதிராக அமையும்,’ என தெரிவித்தார்.
பின்னர், தலைமை நீதிபதி என்.வி.ரமணா பிறப்பித்த உத்தரவில், ‘கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதை நாங்கள் தடுக்க முடியாது. அதே நேரம், இலவசங்கள் எது என்பதை வரையறை செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு, குடிநீர் இணைப்பு, நுகர்வோர் மின்னணு பொருட்கள் வழங்குவது ஆகியவற்றை இலவசம் என வகைப்படுத்த முடியுமா?’ என்பது கேள்வியாக உள்ளது. ஆட்சியில் இல்லாத கட்சிகள் கூட, தேர்தலில் இலவசங்களை அறிவிக்கின்றன. அதை எந்த ரகத்தில் ஏற்பது? எனவே, இந்த வழக்கில் அனைத்து தரப்பு கருத்தைகளையும் கேட்டு, விரிவாக விவாதித்த பிறகுதான் இறுதி முடிவெடுக்க முடியும். அதனால், இந்த வழக்கு தொடர்பான மனுவை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். அவர்கள் தங்கள் பரிந்துரை, கருத்துக்களை அறிக்கையாக வரும் சனிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்,’ என கூறி, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதை நாங்கள் தடுக்க முடியாது. அதே நேரம், இலவசங்கள் எது என்பதை வரையறை செய்ய வேண்டும்.