நாகர்கோவில்: தோவாளை தாழக்குடி சாலை ரூ.3.28 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் ரூ.3.87 கோடியில் முப்பாற்று ஓடை குறுக்கே பாலமும் கட்டப்பட உள்ளது. தோவாளை தாழக்குடி சாலையில் லாயம் வரை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாலை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தப்பட்டு மேம்பாடுத்தப்படுகிறது. இதற்காக ரூ.3.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.
இந்த சாலையின் குறுக்கே 8 சிறிய பாலம், 600 மீட்டர் நீளத்திற்கு தடுப்புசுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர முதற்கட்டமாக 3.75 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைப்பதற்கு ஜல்லி போடப்பட்டுள்ளது. தற்போது தார்போடுவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தபட்டு, அந்த சாலைகளை நெடுஞ்சாலையத்துறை பராமரித்து வருகிறது. இதுபோல் தோவாளை தாழக்குடி சாலையில் லாயம் வரை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்து சாலை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த சாலை பணிகள் இன்னும் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும். இதனை தவிர இந்த சாலையின் குறுக்கே முப்பாற்றுஓடை செல்கிறது. இந்த ஓடையின் குறுக்கே தரைபாலம் உள்ளது. கடந்த பருவமழையின்போது இந்த பாலம் சேதமடைந்தது. இந்த தரைபாலத்தை மாற்றிவிட்டு உயர்மட்ட பாலம் அமைக்கமுடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.3.87 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகள் முடிந்தவுடன் பாலம் அமைக்கும் பணியும் தொடங்கப்படும். என்றார்.