நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது: 49). இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில், தனது கணக்கிலிருந்து, சொந்த அவசரத் தேவைக்காக ரூ.8 லட்சத்தை எடுத்துள்ளார். தொடர்ந்து, நிதி நிறுவனத்துக்குச் சென்ற அவர், அங்கு சீட்டுப்பணம், ரூ.12 லட்சத்தையும் எடுத்துள்ளார். மொத்தமாக, ரூ.20 லட்சத்தை, தனது காரில் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, தனது மகன் ஹரிஹரனை, பணத்தை எடுத்துக்கொண்டு, வண்டியை லாக் செய்துவிட்டு வரும்படி தெரிவித்தவர், வீட்டுக்குள் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் மகனும், காரை லாக் செய்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். அவர்களை பின் தொடர்ந்து, இரண்டு பைக்குகளில், ஹல்மெட் அணிந்துகொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள், கார் கதவை உடைத்து, உள்ளே இருந்த, ரூ. 20 லட்சத்தைக் கொள்ளை அடித்து சென்றதாகச் சொல்லப்படுகிறது. சிறிதுநேரம் கழித்து பாலசுப்ரமணி வெளியே வந்து கார் கதவு திறந்து கிடப்பதை கண்டதும், அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வேகமாக காருக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ரூ. 20 லட்சம் கொள்ளைபோயிருப்பதை கண்டு அதிர்ந்துபோயுள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக, பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸார், தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, வழக்கு பதிந்த போலீஸார், பாலசுப்ரமணியின் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான பைக்கில், உள்ளூர் சீரியல் எண் உள்ளதால், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது என்று போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.