இலக்கியம், ஆன்மிகம், நகைச்சுவை என தன் பேச்சின் மூலம் மக்களைக் கவர்ந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணனின் மறைவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழால் அனைவரையும் ஈர்த்த அவரின் மறைவு குறித்த தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நெல்லை கண்ணன் வீட்டுக்குச் சென்று அவர் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சமயம், இலக்கிய சொற்பொழிவு என அனைத்திலும் ஈடுஇணையற்ற தீரராய் திகழ்ந்தவர் நெல்லை கண்ணன். அவரின் பேச்சில் காட்டமும் இருக்கும், காரமும் இருக்கும், நகைச்சுவையும் இழையோடும். அவர் பட்டிமன்றங்களின் நடுவராக இருந்திருக்கிறார். அணித்தலைவராக பேசியிருக்கிறார். எதுவாக இருந்தாலும் தன் பேச்சில் தனிமுத்திரை படைப்பார்.
நெல்லை என்று சொன்னால் நெல்லை கண்ணனையும் சேர்த்துச் சொல்லும் அளவுக்குப் புகழ் வாய்ந்தவராக வாழ்ந்தவர். அப்படிப்பட்ட நெல்லை கண்ணன், தாமிரபரணி ஆற்றின் குறுக்குத்துறை பற்றி எழுதி புத்தகமாக வெளியிட்டார். பேச்சிலும் எழுத்திலும் புலமைபெற்று விளங்கினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர் வீட்டுக்கு வந்துள்ளார். காமராஜரை தன் தலைவராக நேசித்தார். நெல்லை கண்ணன் என்றால் தமிழ்நாடு முழுவதும் நெல்லை என்ற சொல்லுக்குப் புகழ் சேர்த்தார். அவரின் மறைவு அதிர்ச்சியைக் கொடுத்தது, இலக்கிய சமய உலகுக்கும் இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
அரசியல் வாழ்வில் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் அவரை எல்லோரும் மதித்தார்கள். அவர் மறைவு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் இலக்கிய உலகிற்கும், தமிழுக்கும் இழப்பு. நெல்லை கண்ணன் புகழ் என்றும் நிலைத்திருக்கும், நெல்லை இருக்கும்வரை அவர் புகழ் நிலைத்திருக்கும்” என்றார்.