நெல்லை கண்ணன் மறைவு: அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி..!

மறைந்த நெல்லை கண்ணன் உடலுக்கு அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ் ஆர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இலக்கியவாதியும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் இன்று காலமானதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் நெல்லை டவுன் அம்பாள் சன்னதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில், நெல்லை கண்ணன் மறைவு செய்தி கேட்டு முதல்வர் அதிர்ச்சி கலந்த வருத்தம் அடைந்தார். உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரண்டு அமைச்சர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளோம்.

தமிழ் இலக்கியவாதியும் தமிழ்சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் மறைந்தது வருத்தமளிக்கிறது. முதல்வரும் நெல்லை கண்ணன் குடும்பத்தார் துக்கத்தில் பங்கெடுத்துள்ளார். முதல்வர் சார்பிலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.