கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி. 82 வயதான அவர் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து தனிமையில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று விடிந்து, நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சரோஜினியின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர். அப்போது பேரதிர்ச்சி… வாய் மற்றும் கை கால்கள் பிளாஸ்டிரியால் சுற்றி, மூச்சடைத்து கொல்லப்பட்டு கிடந்தார், சரோஜினி. அதிர்ச்சியடைந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களும் தடயவியல் வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வீட்டிலிருந்த சரோஜினியின் 4 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை அமைத்த போலீசார், மூதாட்டியின் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமாக புதுமுக இளைஞர்கள் இருவர் அப்பகுதியில் சுற்றி திரிந்தது பதிவாகியிருந்தது. அவர்கள் சென்ற இடங்களில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த அதிகாரிகள், சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பெங்களூருக்கு தப்பி சென்று கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக பெங்களூர் விரைந்த போலீசார், அங்கே பதுங்கி இருந்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அபினேஷ், வசந்த் என்பதும் சரோஜினியின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது அவர்கள்தான் என்பது உறுதியானது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை நாகர்கோவிலில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட மூவரிடம் விசாரணை நடத்தியதில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி கொலையில் ஒரு வாரத்திற்கு பிறகு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.